மார்த்தாண்டம் பகுதியில் குடிநீர் பணிக்குதோண்டிய குழிகள் கடும் அவதியில் பொது ஜனங்கள்

0மார்த்தாண்டத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

மார்த்தாண்டம் பகுதியில் நிலவிய கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் குழித்துறை தாமிரபரணி ஆற்றுபாலத்தில் இருந்து பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு இரும்பில் ஆன மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் வழியாகவும், மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள ரோடு வழியாகவும் வாகன போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழித்துறை நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இந்நிலையில், மார்த்தாண்டத்தில் இருந்து வெட்டுவெந்நி வரை சுமார் 71 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால், பைக், ஆட்டோ தவிர்த்து எஞ்சிய வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு போக்குவரத்து கழக பஸ்களை தவிர்த்து எஞ்சிய வாகனங்கள் இந்த ரோட்டில் பயணித்து வருகின்றன. இதனால், கடந்த சில தினங்களாக மார்த்தாண்டம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. கனரக வாகனங்கள் செல்ல கூடாது என்ற தடையை மீறி மினிபஸ், டெம்போ, லாரி போன்ற வாகனங்கள் சகஜமாக சென்று வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் பன்மடங்காக அதிகரித்துள்ளது. தடையை மீறி செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும் போலீசார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி மார்த்தாண்டம் வெட்டுவெந்நி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரும், குழித்துறை நகராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)