இலவச பயணச்சீட்டு பெற்று பயணம் செய்த மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்

0

குமரி மாவட்டத்தில் அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பெண்கள் நகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தினார்.


இதேபோல் திருநங்கைகளும், மாற்றுத்திறனாளிகளும், மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் அவர்களுடைய உதவியாளர்களும் நகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் அறிவித்து நடைமுறைப் படுத்தியுள்ளார்.

மற்ற பயணிகளுக்கு அவர்களுடைய கட்டணத்துக்கு தகுந்தவாறு பயணச்சீட்டு வழங்குவதை போன்று திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் ஆகியோருக்கு இலவச பயண சீட்டு வழங்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கிய முதல் அமலுக்கு வந்துள்ளது.


குமரி மாவட்டத்தில் நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய நகர பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச பயண சீட்டில் மாற்றுத்திறனாளிகள் என்பதை குறிக்கும் வகையில் மா.தி. என்ற குறியீட்டுடன் கூடிய பயணச் சீட்டும், அவருடைய உதவியாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்கள் என்பதை குறிக்கும் வகையில் மா.உ. என்ற குறியீட்டுடன் கூடிய பயணச்சீட்டு, 
திருநங்கைகள் என்பதை குறிப்பிடும் வகையில் தி.ந. என்ற குறியீட்டுடன் இலவச பயண சீட்டு நேற்று முதல் வழங்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)