குமரியில் 1.50 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள்

0

குமரி மாவட்டத்தில் 1 முதல் பிளஸ்- 2 வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 1.50 லட்சம் பேருக்கு இலவச பாட புத்தகங்கள் வினியோகம் பள்ளிகள் வாரியாக நடந்து வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வினியோகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வினியோகம் தொடங்கியது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தை பொருத்தவரையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் தனியார் பள்ளிகள் போன்றவை செயல்பட்டு வருகின்றன.
இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 616 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வினியோகம் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் நேற்று மாணவ மாணவிகள் ஏராளமானோர் இலவச பாடப் புத்தகங்களை பெற்றுச் சென்றனர். 

இதனால் அந்த பள்ளிகளில் மாணவ- மாணவிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. ஆனாலும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாடப்புத்தகங்கள் வினியோகம் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் வாரியாக நடந்தது. இதே போல் தனியார் பள்ளிகளிலும் பாடப் புத்தகங்கள் வினியோகம் அந்தந்த பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)