கால்வாயில் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடல்

0

தாழக்குடியில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தையின் பிணம் கால்வாயில் மிதந்து வந்தது. கள்ளக்காதலில் பிறந்ததால் வீசினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆரல்வாய்மொழி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தாழக்குடியில் இருந்து சந்தைவிளைக்கு செல்லும் சாலையோரம் நாஞ்சில் புத்தனாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே இருந்த பழையபாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், பொதுமக்கள் வசதிக்காக அதன் அருகில் குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம் போடப்பட்டுள்ளது. தற்போது, அதன் வழியாகத்தான் போக்குவரத்து நடக்கிறது. இந்தநிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் தற்காலிக பாலம் அருகே கால்வாய் ஓரத்தில் தண்ணீரில் ஒரு பச்சிளம் குழந்தையின் பிணம் ஒதுங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள், இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர், குழந்தையின் உடலை கால்வாயில் இருந்து வெளியே மீட்டனர். அது பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் பிணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கால்வாயில் வீசி சென்றவர்கள் யார்? கள்ளத்காதலில் பிறந்ததால் ஈவு, இரக்கமின்றி வீசிச் சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் குழந்தை பெற்றவர்கள் விவரம் குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகிறார்கள். 

கால்வாயில் பச்சிளம் குழந்தையின் பிணம் மிதந்து வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0Comments
Post a Comment (0)