டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற வாலிபர் கைது

0

மார்த்தாண்டத்தில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மார்த்தாண்டம் பஸ்நிலையம் அருகில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் மது வாங்க வந்தார். கடையில் இருந்த விற்பனையாளரிடம் 200 ரூபாய் நோட்டை கொடுத்து மதுபாட்டில் கேட்டுள்ளார். 

அந்த நோட்டு புத்தம் புதிதாக இருந்தது. இதனால் இந்த நோட்டு, கள்ளநோட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் விற்பனையாளருக்கு எழுந்தது. இதையடுத்து கடையின் மேற்பார்வையாளர் ஜேம்சிடம் காட்டினார். பின்னர் அந்த நோட்டை சோதித்ததில் கள்ளநோட்டு தான் என்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அந்த வாலிபரையும் அவர்கள் வெளியே விடாமல் மடக்கினர்.

தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து வந்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் மார்த்தாண்டம் அருகே கரம்பவிளையை சேர்ந்த ராம்கி (வயது 22) என்பதும், கள்ளநோட்டை டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்றதும் தெரிய வந்தது.
 
மேலும் கள்ளநோட்டுகளை மார்த்தாண்டம் அருகே தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த ஒருவர் கொடுத்ததாக ராம்கி தெரிவித்தார். உடனே போலீசார் அந்த முகவரிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு ராம்கி தெரிவித்த நபர் இல்லை. போலீசார் வருவதை அறிந்ததும் அந்த நபர் தலைமறைவாகி விட்டார்.இந்த சம்பவத்தை தொடர்ந்து குமரியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட ஒரு கும்பல் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

ராம்கியிடம் கள்ளநோட்டுகளை கொடுத்த நபர் போலீசிடம் சிக்கினால், கள்ளநோட்டு அச்சடிக்கப்படும் இடம், இதில் எத்தனை பேர் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது. எனவே அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ராம்கியை கைது செய்து அவரிடம் இருந்த 10 எண்ணம் கொண்ட 200 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0Comments
Post a Comment (0)