குமரியில் கொரோனா தொற்று மீண்டும் ஏறுமுகம்

0

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் ஏறுமுகமாகி உள்ளது. ஒரே நாளில் 25 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைவாக இருந்து வந்தது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஒற்றை இலக்க எண்களிலேயே இருந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நாகர்கோவில் நகரிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி, வடசேரி, நேசமணி நகர், கே.பி.ரோடு பகுதிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியில் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் கொரோனா வேகமாக பரவ தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 2,751 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் ஒருவரும், கிள்ளியூர் வட்டாரத்தில் 2 பேரும், குருந்தங்கோட்டில் 3 பேரும், மேல்புறத்தில் ஒருவரும், முன்சிறையில் 6 பேரும், ராஜாக்கமங்கலத்தில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் பாதிப்பு 25 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்து 263 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில அளவைப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரியின் மகள் பிரசவத்துக்காக நாகர்கோவில் வந்துள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

இதனால் நில அளவைப்பிரிவு அதிகாரியும், அவருடைய மனைவியும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் அவர்களுக்கும் தொற்று இருப்பது தெரிய வந்தது. அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிகாரி இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்றும், இதனால் அவர் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதிகாரிக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருடைய அலுவலகத்தில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய ஊழியர்கள் 54 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வதற்கு காரணம் என்று தெரிவித்தனர். மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)