வடமாநில கும்பல் மூலம் ரெயிலில் கஞ்சா கடத்தல்

0



வடமாநில கும்பல் மூலம் ரெயிலில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக நாகர்கோவிலில் கைதானவரிடம் நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் முதற்கட்டமாக வெளி மாநிலங்களில் இருந்து ரெயில் மூலமாக அதிகளவில் கஞ்சா தமிழகத்துக்கு கொண்டு வரப்படுவது தெரிய வந்தது.

இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ரெயில்களில் தீவிர சோதனை நடந்து வருகிறது. இதே போல குமரி மாவட்டத்திலும் வெளிமாநில ரெயில்களில் நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலில் ரெயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ஒடிசாவை சேர்ந்த நிரஞ்சன் மாஜி (வயது 22) என்பவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

இதை தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, கஞ்சா கடத்தல் கும்பல் தற்போது வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. கஞ்சாவை கடத்துபவர்களுக்கு செல்போன் மூலம் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கஞ்சாவை கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கப்படுகிறது.தற்போது கைது செய்யப்பட்ட நிரஞ்சன் மாஜியும் இவ்வாறே செயல்பட்டு உள்ளார். திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கியவுடன் குறிப்பிட்ட நபரிடம் பேக்கை ஒப்படைக்க வேண்டும் என கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் நிரஞ்சன் மாஜி போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். அதே சமயத்தில் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)