காலில் காயத்துடன் சுற்றி திரிந்த யானை திடீர் சாவு

0

குமரி வனப்பகுதியையொட்டி காலில் காயத்துடன் சுற்றி திரிந்த யானை திடீரென இறந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் களியல் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டிய மோதிரமலை, கோலிஞ்சி மடம், கல்லாறு, குற்றியாறு, கிளவியாறு, சிற்றாறு, ஒரு நூறாம் வயல் உள்ளிட்ட ரப்பர் கழக பகுதிகள் மற்றும் காணி குடியிருப்பு பகுதிகளிலும் சில நேரங்களில் கூட்டம், கூட்டமாக நடமாடுவது உண்டு.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக யானைகள் கோலிஞ்சிமடத்தை ஒட்டிய வனப்பகுதியிலும், காணிகளின் விளை நிலங்களிலும் நடமாடி வந்தன. இதில் ஒரு பெண் யானை காலில் காயத்துடன் தளர்ந்த நிலையில் சுற்றி திரிந்துள்ளது.


இந்தநிலையில் நேற்று காலையில் அந்த யானை நடக்க முடியாமல் அவதிப்பட்டதை அங்குள்ள மக்கள் பார்த்தனர். பின்னர் உடனடியாக களியல் வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து களியல் வனச்சரகர் பூபதி, வனவர் வெங்கடேஷ் மற்றும் வனக்காவலர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். கிளைகளை வெட்டி உணவாக கொடுத்தனர். ஆனால் யானையால் உட்கொள்ள முடியவில்லை. தண்ணீரும் குடிக்கவில்லை. மிகவும் சோர்வாக யானை நின்றது. இந்தநிலையில் அந்த யானை மதியம் 1 மணிக்கு திடீரென்று கீழே சரிந்து விழுந்து இறந்தது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில் உதவி வன பாதுகாவலர் சிவகுமார் மற்றும் மருத்துவக்குழுவினர் யானை இறந்து கிடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். உயிரிழந்த யானைக்கு சுமார் 55 வயது இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறுகையில், உயிரிழந்தது பெண் யானையாகும். வயதான நிலையில் யானை காலில் ஏற்பட்ட காயம் மற்றும் உடல் தளர்வின் காரணமாக நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளது. இந்தநிலையில் யானை இறந்துள்ளது என தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)