இன்று ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: நாகராஜா கோவிலில் 26 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

0

கன்னியாகுமரி நாகர்கோவில்

ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாகராஜா கோவிலில் கூட்டத்தை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க 26 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

 ஆவணி ஞாயிறு ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு என்றால் ஆவணி மாதத்தில் நாகராஜர் வழிபாடு குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது.

 ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்றும், பிரச்சினைகள் தீரும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. இதன் காரணமாக நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

 அதிலும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கோவிலில் ஆண்களும், பெண்களும் குவிவார்கள். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மட்டும் அல்லாது கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். முதல் ஞாயிற்றுக்கிழமை அந்த வகையில் இன்று, இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

 பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிடுவதற்காக கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்வார்கள் என்பதால் சிலைகளில் ஊற்றப்படும் பால் வெளியேறுவதற்கான கால்வாய் சீரமைக்கப்பட்டு இருக்கிறது. கழிவறை சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது. இதற்காக பக்தர்கள் அதிகாலை 3 மணிக்கே வருவார்கள் என்பதால் கோவிலில் கூடுதல் மின் விளக்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரூ.400 செலுத்தி பிரசாத பை வாங்கி கொள்ளலாம். அந்த பிரசாத பையில் ஒரு லிட்டர் பால் பாயாசம், பழம், வெற்றிலை பாக்கு போன்றவை இருக்கும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


 இதற்கிடையே கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி யாரேனும் மர்ம நபர்கள் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கோவிலில்
 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் மொத்தம் 26 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பக்தர்களின் நடமாட்டம் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படும். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)