திருவள்ளுவர் சிலைக்கு கடுக்காய் பொடி, சுண்ணாம்பு கலவை பூசும்பணி தொடக்கம்

0

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கடுக்காய் பொடி, சுண்ணாம்பு கலவை பூசும்பணி தொடங்கியது.


 சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

 இந்த சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்பட்டு அதன் மெருகு குறையாமல் இருப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை.


அதன்பிறகு பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் திருவள்ளுவர் சிலைக்கு வந்து ஆய்வு செய்த பின், ரூ.1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணி டெண்டர் விடப்பட்டது. அதைத்தொடர்ந்து ரசாயன கலவை பூசும் பணிக்காக சிலையைச் சுற்றி சாரம் அமைக்கும் பணி நடந்தது. ரசாயன கலவை பூசும் பணி வருகிற நவம்பர் மாதம் முடிக்கப்பட்டு, திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.


 இந்தநிலையில் இயற்கை சீற்றத்தின் காரணமாக பணிகளை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது தான் சிலையின் இணைப்பு கற்களின் உறுதித்தன்மைக்காக தொல்லியல் துறையின் ஆலோசனைப்படி மணல், கருப்புக்கட்டி, சுண்ணாம்பு, கடுக்காய் பொடி ஆகியவை சேர்ந்த கலவை பூசப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து காகித கூழ் கொண்டு சிலையில் படர்ந்துள்ள உப்பு படிவங்களை அகற்றும் பணி நடைபெறும். இவை முற்றிலும் நிறைவடைந்த பின்னரே சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)