குமரி மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை

0

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சியின் காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடி சுற்றுவட்டார பகுதியில் இன்று அதிகாலை 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.அங்கு அதிகபட்சமாக 94.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவிலிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இரவு விட்டு விட்டு விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இரவு இதமான குளிர் காற்று வீசியது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது கன மழை கொட்டி தீர்த்தது.

இதையடுத்து மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். இருசக்கர வாகனங்களில் மாணவ-மாணவிகளை அழைத்து வந்தவர்கள் மழையில் நனைந்தவாறு வந்தனர். கடைவீதிக்கு வந்த பொது மக்களும் மழையில் நனைந்து அவதிக்கு உள்ளானார்கள். சுசீந்திரம், கொட்டாரம், ஆணைக்கிடங்கு, ஆரல்வாய் மொழி, தக்கலை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து உயர்ந்து வருகிறது. பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.76 அடியாக உள்ளது. அணைக்கு 1464 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 582கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 66.80 அடியாக உள்ளது. அணைக்கு 688 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 34.61 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 16.30 அடியாகவும், சிற்றாறு-1 நீர்மட்டம் 8.76 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 8.86 அடியாகவும் உள்ளது.பேச்சிபாறை, பெருஞ்சாணி சிற்றாறு அணைகளில் இருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகள் மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

 சுசீந்திரம், தெரிசணம்கோப்பு பகுதிகளில் வயல் உழவு பணி நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் நடவு பணிக்காக நாற்றுகள் பாவப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு 

மில்லி மீட்டரில் வருமாறு:-

 பேச்சிபாறை-19.6, பெருச்சாணி-10.8, 
சிற்றார்-1-29.4, 
சிற்றார்-2-54.2, மாம்பழத்துறையாறு-26, புத்தன்அணை-9.2, நாகர்கோவில்-60, இரணியல்-16, 
குளச்சல்-9.8,
 சுருளோடு-30, கன்னிமார்-5.4, பூதப்பாண்டி-1, 
மயிலாடி-94.2, கொட்டாரம்-13.8, பாலமோர்-40.4,
 அடையா மடை-29.4, 
ஆணை கிடங்கு-25, திற்பரப்பு-34.6, குருந்தன்கோடு-52.4, ஆரல்வாய்மொழி-6.4, கோழிபோர்விளை-33.4, முள்ளங்கினாவிளை-9.2.

Post a Comment

0Comments
Post a Comment (0)