"திப்ருகர் டூ கன்னியாகுமரி" விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அப்டேட் கொடுத்த ரயில்வே!

0

வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ருகரில் இருந்து தமிழகத்தின் கன்னியாகுமரி வரை 9 மாநிலங்களை கடந்து வரும் இந்தியாவின் நீண்ட ரயிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 22 ஆம் தேதி முதல் வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மக்கள் மட்டும் இன்றி வசதி படைத்தவர்களுக்கும் விருப்பமானதாக ரயில் பயணம் அமைந்துள்ளது.

ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களையும் இந்திய ரயில்வே அறிவித்து வருகிறது.

நீண்ட தூரம் இயக்கப்படும் ரயில்


அதுபோக வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்களையும் தற்போது இந்திய ரயில்வே அறிவித்து பயணிகளை ஈர்த்து வருகிறது. சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் உள்பட இதுவரை 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே சேவைகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், பயணிகளை கவரும் வகையில், இந்தியாவின் மிக நீண்ட தூர ரயிலாக விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை வடகிழக்கு ரயில்வே இயக்கி வருகிறது.

இந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் வரை இயக்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவை பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த ரயிலின் மொத்த பயண தூரம் 4,189- கி.மீட்டர் ஆகும். 9 மாநிலங்கள் வழியாக பயணிக்கும் இந்த ரயில் 80 மணி நேரம் பயணித்து இந்த இலக்கை அடைகிறது. இந்தியாவின் நீண்ட தூர ரயில் என்ற பெருமை கொண்ட இந்த ரயில் தற்போது வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது.



உலக அளவில் 24-வது தொலைதூர ரயில் என்ற பெருமையும் கொண்டது. 15906 என்ற எண் கொண்ட இந்த ரயில் சனிக்கிழமை மட்டும் இயக்கப்பட்டது. சனிக்கிழமை திப்ருகர் நகரில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரிக்கு இரவு 10 மணியளவில் வந்து சேரும். வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் இந்த ரயில் வரும் 22 ஆம் தேதி முதல் வாரம் இருமுறை இயக்கப்படும் என்று வடகிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.


அதன்படி இந்த ரயில் சேவை இனி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாரத்திற்கு இரண்டு முறை இந்த ரயில் இயக்கப்படுகிறது. வடகிழக்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தொலைதூரம் பயணிக்க ஆசைப்படும் பயணிகளை கவரும் வகையில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.


உலகின் நீளமான ரயில்

ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து விளாடிவோஸ்டாக் நகரம் வரை இயக்கப்படும் ரயில்தான் உலகின் தொலைதூர ரயில் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ரயிலின் மொத்த பயண தூரம் 9,250 கி.மீட்டர் ஆகும். இந்தியாவின் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிக்கும் தூரத்தை விட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. பரப்பளவில் மிகப்பெரிய நாடாக உள்ள ரஷ்யவின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதியை இணைக்கும் வகையில் ரஷ்யாவின் இயக்கப்படும் தொலைதூர ரயில் செல்கிறது.


Post a Comment

0Comments
Post a Comment (0)