உங்கள் கைவிரல் நீட்டப்பட்டால் துண்டிக்கப்படுவீர்கள்' - பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்த திமுக மேயர்

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர தி.மு.க சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது



இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மகேஷ், தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, முனைவர் பொன்னேரி சிவா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் மாநகராட்சி மேயர் மகேஷ் பேசுகையில், "நான் கவுன்சிலராக இருக்கும் நான்காவது வார்டில் கிராமசபா கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு கூட்டத்தை தொடங்கிவைக்க வந்திருந்தார். அதற்காக கட்சி தோழர்கள் பார்வதிபுரம் பகுதியில் தி.மு.க கொடிகளை கட்டிவைத்திருந்தனர். ஆனால் தி.மு.க கொடிகளின் இடையே பா.ஜ.க கொடியை கட்டி வைத்திருந்தனர். பா.ஜ.க கொடிகளை இரவோடு இரவாக எங்கள் கழக தோழர்கள் அப்புறபடுத்தினார்கள்.


நாகர்கோவிலில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டம்

பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்களே அன்று உங்கள் தலைவர்கள் யாராவது வந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் யாரும் வரவில்லை, வேண்டுமென்றே பிரச்னையை கிளப்பவேண்டும் என்ற நோக்கில் நீங்கள் கொடிகளை கட்டியதால் அதை நாங்கள் அப்புறபடுத்தினோம். நான் வார்டு உறுபினராகவும், மேயராகவும், தி.மு.க மாவட்ட செயலாளராகவும் இருக்கும் இடத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தும்போது ஊறு விளைவிக்கவேண்டும் என்று நினைத்து பா.ஜ.க கொடியை அல்ல எதையாவது தலையை நீட்டினால்..." என கூறியபடி கழுத்தில் கையை வைத்து துண்டிப்பது போல் சைகை காட்டியவர் தொடர்ந்து, "தெரிந்துகொள், அதை செய்ய நாம் தயாராக இருக்கிறோம்.

என்மீது வழக்குவந்தாலும் பரவாயில்லை. அதை சந்திக்க நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். தலைவர் ஆட்சிக்கு ஊறு விளைவிக்கக்கூடாது என்பதற்காக பொறுத்துப்போகிறோம். பா.ஜ.க இந்த மாவட்டத்தில் மதகலவரத்தை உருவாக்கி மாற்றத்தை கொண்டுவரலாம் என நினைத்தால் அது நடக்காது. எங்கள் மீது உங்கள் கைவிரல் நீட்டப்பட்டால் துண்டிக்கப்படுவீர்கள்" என ஆவேசமாக பேசினார்.


கோட்டாறு காவல்நிலையத்தில் திரண்ட பா.ஜ.க-வினர்

இதற்கிடையே பா.ஜ.க கட்சியினரை மிரட்டும் தொனியில் பேசிய நாகர்கோவில் மேயர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்‌.காந்தி தலைமையில் கட்சி தொண்டர்கள் நேற்று இரவு கோட்டார் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் தி.மு.க பா.ஜ.க இடையேயான உரசல் அதிகரித்து வருகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)