நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காதது ஏன்? - 20 வருட திரை அனுபவம் பகிர்ந்த நயன்தாரா


என் மீதான விமர்சனங்கள் குறித்து நான் ஒருபோதும் கண்டுகொள்வது இல்லை’ என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் நாளை (டிசம்பர் 22) திரையரங்குகளில் வெளியாகும் படம் ‘கனெக்ட்’. இந்தப் படத்தையொட்டி நடிகை நயன்தாரா அளித்துள்ள நேர்காணலில் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் நான் திரைத் துறைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. திரைத் துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவமே தரப்படவில்லை. ஓர் இசைவெளியீட்டு விழாக்களுக்குச் சென்றாலுமே கூட முக்கியத்துவம் எதுவுமில்லாமல் நடிகைகளை ஓரமாக உட்காரவைத்துவிடுவார்கள். அதனாலேயே நான் எந்த நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை

பெண்கள் திரைத் துறையில் சமமாக நடத்தப்பட வேண்டும் என அப்போது நான் ஆசைப்பட்டிருக்கிறேன். தற்போது பெண்களை மையப்படுத்தும் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு தயாரிப்பாளர்களும் ரெடியாக உள்ளன. 15, 20 பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில், அதில் 5 படங்கள் பெண் மைய கதாபாத்திரத்தை தழுவி வெளியாகின்றன” என்றார்.

தொடர்ந்து ‘‘ஆரம்ப காலக் கட்டத்தில் மட்டுமல்ல, இன்றும் கூட என் மீது விமர்சனங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் ‘கனெக்ட்’ படத்தின் ஒரு காட்சியிலிருக்கும் என்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து, அது வைரலானது. ‘வெயிட் போட்டால் வெயிட் போட்டீங்க எனவும், ஒல்லியாக இருந்தால் ஒல்லியாகிவிட்டீர்கள்’ என விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். கனெக்ட் படத்தின் அந்தப் புகைப்படத்தை பொறுத்தவரை அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உடலமைப்பில்தான் இருந்தேன். அது தான் வைரலானது. எது செய்தாலும் தவறு என ஆகிவிடுகிறது. பொதுவாக, என் மீதான விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை. அதைப் பற்றி யோசிப்பதுமில்லை” என்றார்.



விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா பேசுகையில், “என்னுடைய காதலெல்லாம் என் கணவர்தான். எப்போது நாங்கள் காதலிக்கத் துவங்கினோமோ அப்போதிலிருந்து காதலுக்கான அர்த்தமாக அவர் இருக்கிறார். அவருடன் இருக்கும்போது எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என்ன நடந்தாலும் அவர் பார்த்துகொள்வார் என்ற தைரியம் எனக்கு வந்தது” என்றார்.

Post a Comment

புதியது பழையவை