சுசீந்திரம் கோவில்களை பார்வையிட்ட குக்கர் வெடிப்பு ஷாரிக்!

0

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக், நாகர்கோவிலில் தங்கியிருந்த போது, சுசீந்திரம் மற்றும் கன்னியாகுமரி கோவில்களை பைக்கில் சென்று பார்வையிட்டதாக கிடைத்த தகவலையடுத்து, உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கர்நாடக மாநிலம், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக், நாகர்கோவில், மீனாட்சிபுரத்தில் ஒரு தனியார் லாட்ஜில் மாற்று பெயரில் போலி ஆவணம் கொடுத்து தங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.இங்கு தங்கியிருந்த போது, காலையில் வெளியே சென்றால் இரவு தான் அறைக்கு திரும்பியுள்ளார்.


ஆனால், இங்கு வந்து அவரை யாரும் சந்திக்கவில்லை என, விசாரணையில் லாட்ஜ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும், வெளியே சென்ற போது யாரை சந்தித்தார்; யார் அவருக்கு உதவினார்கள் போன்ற விபரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் சுசீந்திரம் ஸ்தாணுமாலையன் கோவில் குறித்து லாட்ஜ் ஊழியர் ஒருவரிடம் அவர் விசாரித்ததும், கோவில்களுக்கு அவர் பைக்கில் சென்று வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து, உளவுத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நான்கு நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் விசாரணை நடத்திய மங்களூரு போலீசார், திரும்பி சென்றாலும் உளவுப்பிரிவு போலீசாரின் விசாரணை தொடர்கிறது. ஷாரிக் இடலாக்குடி மற்றும் மணவாளக்குறிச்சியில் சிலரை சந்தித்துள்ளது குறித்தும் விசாரணை நடக்கிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)