‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க நடிகர் வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரைத் துறைக்கு திரும்பியிருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், 'லொள்ளு சபா' மாறன், மனோபாலா, 'லொள்ளு சபா' சேசு, டி.எம்.கார்த்திக், 'கேபிஒய்' ராமர், பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடிவேலு நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டியுள்ளன. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வடிவேலு. அடுத்து லைகா தயாரிப்பில் பி.வாசு இயக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து இயக்குநர் ஆறுமுகம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நகைச்சுவை கலந்த படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இதனிடையே, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் நேர்காணலின்போது, ‘‘மீண்டும் இயக்குநர் சுராஜுடன் இணைந்து இரட்டை வேட கதாபாத்திரத்தில் ஒரு படம் நடிக்கிறேன். வேற லெவலில் அந்தப் படம் இருக்கும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என வடிவேலு தெரிவித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் வடிவேலுவின் அடுத்தடுத்த படங்களால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கருத்துரையிடுக