2022... தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கே முக்கியமான ஆண்டு. வணிக ரீதியாகவும், உள்ளடக்கங்கள் ரீதியாகவும் பல ஆச்சரியங்களை கொடுத்திருக்கிறது 2022. அந்த வகையில், மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்து திரையில் ஏமாற்றமளித்த படங்கள் குறித்தும், எதிர்பாராமல் ஹிட்டடித்த படங்கள் குறித்தும் பார்ப்போம். எதிர்பார்த்து ஏமாற்றமளித்த படங்கள்:
மகான்: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சிம்ரன், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா நடித்திருந்த இப்படம் விக்ரம் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
வீரமே வாகை சூடும்: பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்த படம் ‘வீரமே வாகை சூடும்’. கரோனா காரணங்களால் தள்ளிப்போடப்பட்ட இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசானது. விஷால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
ஹே சினாமிகா: நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவான ‘ஹே சினாமிகா’ படத்தில் துல்கர் சல்மான் - அதிதீ ராவ் நடித்திருந்தனர். காதல் படமாக உருவான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தது.
மாறன்: ‘துருவங்கள்16’ பட புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘மாறன்’. நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியான இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்த்திருந்த படம் தனுஷ் ரசிகர்களுக்கு இந்த ஆண்டின் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இயக்குநர்களின் முந்தைய படத்தையொட்டிய எதிர்பார்ப்பில் சொதப்பிய படங்கள்: ‘மதுபானக்கடை’ படம் மூலம் தடம் பதித்த இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான ‘வட்டம்’ எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்தது. சிபிராஜ் நடித்திருந்த இப்படம் அதன் உள்ளடக்கத்தின் அடர்த்தியின்மையால் சொதப்பியது. அதேபோல ‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவான ‘குருதி ஆட்டம்’ படமும் ஏமாற்றம் கொடுத்தது. அதனை அந்தப் பட இயக்குநர் நேர்மையான முறையில் ஒப்புக்கொண்டு அடுத்தடுத்த படங்களில் திருத்திக்கொள்வதாக கூறியிருந்தார்.
ஆண்டின் இரண்டாம் பாதியில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘கோப்ரா’, ஆர்யா நடிப்பில் உருவான ‘கேப்டன்’, தனுஷின் ‘நானே வருவேன்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’, விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’ படங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தின.
இனி, எதிர்பாராமல் ஹிட்டடித்த படங்கள்...
திருச்சிற்றம்பலம்: ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் ‘திருச்சிற்றம்பலம்’. தனுஷ் எனும் பெரிய நட்சத்திரத்தின் படமாக இருந்தபோதிலும், அதற்கான விளம்பரம் அவ்வளவாக இல்லை. அதனாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் இல்லை. இருப்பினும் படம் வெளியான முதல்நாளே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடியை அடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
லவ் டுடே: பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ 2கே கிட்ஸ்களின் ஆதர்ச சினிமாவாக உருவெடுத்து வசூலில் வெள்ளப் பெருக்கெடுத்து. வெறும் ரூ.10 கோடியில் உருவான இப்படம் ரூ.100 கோடியை நெருங்கி, தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு, விரைவில் பாலிவுட்டுக்கும் கைமாற உள்ளது.
கட்டா குஸ்தி: செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி’ இந்தாண்டின் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது. ஃபேமிலி ஆடியன்ஸ்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் ரூ.50 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தாண்டின் எதிர்பாராத வெற்றி இது.