Varisu Tamil Review

0


விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, ராஷ்மிகா, யோகி பாபு என திரையுலக பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.


அதுமட்டுமின்றி வம்சியின் மாஸ் கமெர்ஷியல் இயக்கத்தில் விஜய் எப்படி இருப்பார் என்பதை திரையில் காணவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள். இத்தைகைய எதிர்பார்ப்பை கொண்டிருந்த விஜய் ரசிகர்களை வாரிசு திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..

கதைக்களம்

ராஜேந்திர குரூப் ஆஃப் கம்பெனியின் உரிமையாளரான ராஜேந்திர பழனிச்சாமி { சரத்குமார் }, தனது மூத்த மகன் ஜெய் { ஸ்ரீகாந்த் } மற்றும் இரண்டாவது மகன் அஜய் { ஷாம் } இருவரையும் வைத்து தனது சாம்ராஜியத்தை ஆண்டு வருகிறார். தனது இரு மகன்களை போல் தனது மூன்றாவது மகன் விஜய் ராஜேந்தரையும் { தளபதி விஜய் } தனது கம்பெனியை பார்த்துக்கொள்ளும் படி கூறுகிறார் சரத்குமார்.


ஆனால், விஜய்யோ அந்த வாய்ப்பு தனக்கு வேண்டாம் என்றும், நான் தந்தையின் பாதையில் செல்ல விரும்பவில்லை, தனக்கென்று தனி பாதையை அமைத்துக்கொள்ள விருபுகிறேன் என்றும் கூறுகிறார். இதனால் கோபமடையும் சரத்குமார், தனது மகன் விஜய்யை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய விஜய் தனக்கென்று புதிய ஸ்டார்ட்டப் கம்பெனியை துவங்கி அதில் சாதிக்காட்ட முயற்சி செய்யும் தருணத்தில், சரத்குமாருக்கு கேன்சர் என அவருடைய குடும்ப மருத்துவர் பிரபு டெஸ்ட் மூலமாக தெரிந்துகொள்கிறார். நீ சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாய் என சரத்குமாரிடம் தெரியப்படுத்துகிறார். இதனால் தன்னுடைய கம்பெனியை தனக்கு அடுத்து ஆளப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் கட்டத்திற்கு சரத்குமார் வருகிறார்.


இந்த சமயத்தில் தனது மனைவி ஜெயசுதா ஆசைப்பட்டபடி தங்களுடைய 60ம் கல்யாணத்தையும் நடத்த முடிவு செய்யும் சரத்குமார், 7 ஆண்டுகள் பிரிந்திருக்கும் தனது மூன்றாவது மகன் விஜய்யையும் தனது மனைவியின் மூலம் மீண்டும் வீட்டிற்கு வரவழைக்கிறார். இந்த 60ம் கல்யாண நேரத்தில் சரத்குமாரின் குடும்பத்தில் மாபெரும் பிரச்சனை வெடிக்கிறது. இதனால் மூத்த மகனும், இரண்டாவது மகனும் வீட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட, தன்னுடைய கம்பெனியை யாரிடம் ஒப்படைப்பது என்று எண்ணி தவிக்கிறார் சரத்குமார்.

இந்த நேரத்தில் தனது மூன்றாவது மகன் விஜய் தனது புதிய ஸ்டார்ட்டப் கம்பெனியின் மூலம் சாதித்துக்காட்டியதை செய்தியில் பார்க்கும் சரத்குமார், விஜய்யிடம் தனது ராஜேந்திர குரூப் ஆஃப் கம்பெனியின் முழு பொறுப்பையும், ஒப்படைக்க முடிவு செய்கிறார்.

முதலில் ஏற்க மறுக்கும் விஜய் தனது தந்தை இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவார் என்று தெரிந்தவுடன், கம்பெனியின் முழு பொறுப்பையும் கையில் எடுக்கிறார். கம்பெனியை விஜய் கையில் எடுத்தவுடன் வில்லன் பிரகாஷ் ராஜால் என்னென்ன பிரச்சனை வந்தது? வீட்டை விட்டு வெளியேறிய இரு பிள்ளைகளும் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்தார்களா? என்பது படத்தின் மீது கதை..

படத்தை பற்றிய அலசல்

தளபதி விஜய் செம மாஸான ஆக்ஷன் நடிப்பில் மிரட்டுகிறார். அதற்க்கு நிகராக காமெடி, எமோஷன், செண்டிமெண்ட் என பின்னி பெடலெடுக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு பற்றிய காட்சியிலும், தாய் மகன் பற்றிய காட்சியிலும் சிறப்பாக நடித்துள்ளார். முக்கியமாக ஆக்ஷனில் மாஸ் காட்டிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு முழு படத்தையும் தாங்கி பிடித்துள்ளார். ஆனால், ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் மட்டும் தான் கிரிஞ் போல் தெரிந்தது.

கதாநாயகியாக வரும் ராஷ்மிகா கிளாமரில் ரசிகர்களை கவர்ந்தாலும், நடிப்பில் அவருக்கு பேசும்படி ஸ்கோப் இல்லை. ஆனால், நடனத்தில் பட்டையை கிளப்பிவிட்டார்.

விஜய்க்கு பின் இப்படத்தில் மிகப்பெரிய பிளஸ் என்றால், அது யோகி பாபு தான். ஆம், விஜய்க்கும் - யோகி பாபுவிற்குமான காட்சிகள் திரையரங்கில் கைதட்டல்களை அள்ளுகிறது. சரத்குமார் - ஜெயசுதா இருவரும் அனுபவ நடிப்பை கண்முன் நிறுத்திவிட்டனர். ஆனால், வில்லனாக வரும் பிரகாஷ் ராஜுக்கு தான் எதிர்பார்த்த அளவிற்கு வில்லனிசம் திரையில் காணமுடியவில்லை.

ஸ்ரீகாந்த் - ஷாம் இருவரும் அண்ணன் கதாபாத்திரத்தில் அழகாக பொருந்தியுள்ளனர். அதற்க்கு ஏற்றாற்போல் அற்புதமாக நடித்தும் இருக்கிறார்கள். பிரபு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையானதை கச்சிதமாக செய்துள்ளார். சங்கீதாவிற்கு நல்ல ரோல் ஆனால், சம்யுக்தாவிற்கு பெரிதளவில் ஸ்கோப் இல்லை.

கேமியோ ரோலில் வரும் எஸ்.ஜே. சூர்யா திரையரங்கை அதிர வைத்துவிட்டார். அவரை போலவே எதிர்பார்க்கப்பட்ட குஷ்பூவின் கேமியோ படத்தில் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
குடும்பம் என்றால் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்று கூற வரும் வம்சி, எடுத்துக்கொண்ட கதைக்களம் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், திரைக்கதையில் சற்று சொதப்பியுள்ளார். முதல் பாதியில் இடம்பெறும் பல காட்சியில் போர் அடிக்கிறது. தேவையில்லாத இடத்தில் இடம்பெறும் ஜிமிக்கி பொண்ணு பாடல், ரொமான்ஸ் என்ற பெயரில் கிரிஞ் காட்சிகள்.

ஆனால் முதல் பாதியில் சொதப்பியதை இரண்டாம் பாதியில் தூக்கி நிறுத்திவிட்டார். மாஸ் ஆக்ஷன் காட்சிகளும், செண்டிமெண்ட் காட்சிகளும் சுவாரஸ்யத்தை அதிகரித்துவிட்டது. என்னதான் கமெர்ஷியலாக இருந்தாலும், ஒரு நியாயம் வேணாமா என கேட்கும் அளவிற்கு இரண்டாம் பாதியில் சண்டை காட்சிகள் அமைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக அரைத்த அதே மாவை தான் தற்போது தமிழில் அரைத்துள்ளார் வம்சி. இருந்தாலும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். அதற்க்கு தனி பாராட்டு.

தமனின் ரஞ்சிதமே, தீ தளபதி சூப்பராக ஒர்கவுட் ஆகியுள்ளது. பின்னணி இசையில் பின்னிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு விஜய்க்கு மாஸாக ஒவ்வொரு பிஜிஎம்-மும் அமைந்திருந்தது. விவேக்கின் வசனம் படத்திற்கு மிகப்பெரிய பலம். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பிரமாதம். பிரவீன் கே.எல் எடிட்டிங் சூப்பர். திலிப் சுப்ராயன், பீட்டர் ஏயின் ஸ்டண்ட் விஜய்க்கு மட்டுமே மாஸை அதிகரிக்கிறது. ஜானி, ஷோபி, ராஜு சுந்தரம் மூவரின் நடன இயக்கும் அற்புதம்.

பிளஸ் பாயிண்ட்

விஜய்

சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம்

கதைக்களம்

இரண்டாம் பாதி

டைமிங் வசனங்கள்

மைனஸ் பாயிண்ட்

முதல் பாதி திரைக்கதை

ராஷ்மிகா மந்தனா

மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்துள்ளது வாரிசு...VARISU RATING

4/5


More News  : THUNIVU REVIEW  

Post a Comment

0Comments
Post a Comment (0)