கன்னியாகுமரி பெண்ணுக்கும், அமெரிக்க ஆணுக்கும் காணொலி வாயிலாக நடைபெறும் திருமணத்தை பதிவு செய்யுமாறு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வாஷ்மி சுதர்ஷினி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நானும் அமெரிக்காவைச் சேர்ந்த ராகுல் எல்.மது என்பவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருமணத்துக்காக ராகுல் இந்தியா வந்தார். ஆனால் காரணமின்றி எங்களுக்கு திருமணம் செய்துவைக்க மணவாளக்குறிச்சி சார் பதிவாளர் மறுத்துவிட்டார்
பின்னர், விசா காலம் முடிந்ததால் ராகுல் அமெரிக்க சென்றுவிட்டார். தற்போது அவரால் இந்தியா வர முடியாத சூழல் உள்ளது. என்னாலும் உடனடியாக அமெரிக்கா செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இருவரும் காணொலி வாயிலாக திருமணம் செய்யவும், எங்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வழியாக திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரர் காணொலி வழியாக, அமெரிக்காவில் இருக்கும் ராகுலை திருமணம் செய்ய எந்த சட்டத் தடையும் இல்லை. ராகுல் ஏற்கெனவே மனுதாரருக்கு பவர் வழங்கியுள்ளார்
இதனால் திருமணப் பதிவேட்டில் மனுதாரர் அவர் சார்பிலும், ராகுல் சார்பிலும் கையெழுத்திடலாம். பின்னர், சட்டப்படி திருமணப் பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மணவாளக்குறிச்சி சார்பதிவாளர் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அதில், காணொலியில் நடைபெறும் திருமணத்தை பதிவுசெய்து சான்றிதழ் வழங்குவது சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ஏற்புடையதல்ல. அவ்வாறு நடைபெற சாத்தியங்களும் இல்லை. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. காணொலியில் நடைபெறும் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்குமாறு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்