சினிமா பாணியில் துரத்திய போலீஸார்: பிடிபட்ட காரில் டன் கணக்கில் ரேஷன் அரிசி

0

 





குமரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் தென்னந் தோப்பில் பதுக்கி வைக்கப்பட்ட மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸார், வருவாய்த்துறையினரும் தொடர்ந்து சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் மண்டைக்காடு பகுதியில் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகக் கேரளப் பதிவெண் கொண்ட கார் வந்தது. அதைத் தடுத்து நிறுத்திய போது நிற்காமல் சென்றது.

இதனால் அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் காரைத் துரத்திச் சென்றனர். ஒருகட்டத்தில் கார் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். அதிகாரிகள் அதை சோதனை செய்தபோது அதில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது. அரிசியையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ராஜாக்கமங்கலம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் சென்றுபார்த்தபோது அங்கு 50 மூட்டைகளில் இரண்டு டன் ரேஷன் அரிசி இருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் பதுக்கியது யார் என விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)