கவினுக்கு ஜோடியாகும் ‘அயோத்தி’ ப்ரீத்தி அஸ்ரானி


சசிகுமார் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘அயோத்தி’ படத்தில் நடித்திருந்த ப்ரீத்தி அஸ்ரானி ஒரு புதிய படத்தில் கவினுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகுமார், இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடித்து வெளியான படம், ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.



குறிப்பாக இப்படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானியின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். 2020ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ப்ரஷர் குக்கர்’ என்ற படத்தில் இவர் நாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பும் பின்பும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அயோத்தி படமே அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த நிலையில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் ஒரு படத்தில் கவின் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ’கிஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் குஷ்பு நடிக்க இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

புதியது பழையவை