ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை கொடுத்த குமரி போலீஸார்!


நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டூவீலரில் மனு கொடுக்கவும், வேறு சொந்தப் பணிகளை நிறைவேற்றவும் வருவோர் ஹெல்மெட் அணியாமல் வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் போக்குவரத்துப் போலீஸார் அந்த வளாகத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களைப் பிடித்து நூதன தண்டனை வழங்கினர்.


     - HOME DELIVERY NAGERCOIL -



கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளில் எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார். இதனால் நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் எப்போதுமே ஹெல்மெட், லைசன்ஸ் சோதனை நடப்பதால் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணிந்தே செல்கின்றனர். இதனிடையே குமரி ஆட்சியர் ஸ்ரீதரும் அண்மையில் வாகனங்களில் செல்வோரின் போக்குவரத்து விதிமீறல்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து டூவீலர்களில் அதிக சத்தத்துடன் செல்லும்வகையில் பம்பர் பொருத்தி இருக்கும் பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டு பம்பர் அகற்றப்பட்டு வருகிறது.


 இந்நிலையில் நாகர்கோவில் போக்குவரத்து போலீஸார், ஆட்சியர் அலுவலகம் பகுதியில் இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காகச் செல்லும் பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதைக் கவனித்தனர்.


இதனைத் தொடர்ந்து அவர்களைப் பிடித்த போக்குவரத்து போலீஸார், ஆட்சியர் அலுவலக பேரிகார்டுகளை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ளச் செய்தனர். 

மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து ஒட்டப்பட்டு இருந்த வாசகங்களையும் படிக்கச் செய்து, அறிவுரை செய்து அனுப்பிவைத்தனர்.


சிலர் ஆட்சியர் அலுவலக வளாகம் தானே என உள்ளே நுழைந்ததும் அசட்டையாக ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு டூவீலர் ஓட்டுகின்றனர். அதையும் தவிர்க்க ஒரு விழிப்புணர்வுக்காகவே இப்படி நூதன தண்டனை வழங்கியதாக போக்குவரத்துக் காவலர்கள் தெரிவித்தனர்

Post a Comment

புதியது பழையவை