வேலை செய்யும் கடையின் மொட்டை மாடியில், செல்போனில் பேசியவர் தவறி விழுந்து உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், வெள்ளறடை பகுதியைச் சேர்ந்தவர் அனு(33). இவருக்கு திருமணம் முடிந்து குழந்தையும் உள்ளது. அனுவுக்குத் தீராத குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவரது மனைவி, குழந்தையை எடுத்துக்கொண்டு அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அனு, கன்னியாகுமரி மாவட்டம் கழுவன் திட்டை பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று மாலை தனக்கு வந்த போன்காலைப் பேச மொட்டை மாடிக்குச் சென்றார். அங்கு நடந்து கொண்டே பேசியவர், மொட்டை மாடியின் பக்கச் சுவரில் சிறிது நேரம் இருந்து பேசுவதும், பின்பு நடந்து கொண்டே பேசுவதாகவும் இருந்தார். இதில் திடீரென அவர் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலன் இன்றி இன்று காலையில் அனு பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துரையிடுக