திருவட்டார் அருகே 2 மகன்களை எரித்துக் கொன்று தாய் தற்கொலை


கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வேர்கிளம்பியை அடுத்த பூங்கோடு செங்கோடி கிராமத்தை சேர்ந்தவர் யேசுதாஸ் (வயது 52), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சீமா (38). மகன்கள் கெவின் (15), கிஷான் (7). 2 பேரும் ஆற்றூர் அருகே ஒரு பள்ளியில் படித்து வந்தனர்.

 கெவின், 10-ம் வகுப்பும், கிஷான் 2-ம் வகுப்பும் படித்தனர். அவர்கள் 2 பேருக்கும் நரம்பு பிடிப்பு பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர். இருப்பினும் நோய் பாதிப்பு சரியாகவில்லை. 

இது சீமாவுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அவருக்கும் கணவர் யேசுதாசுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.


நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு யேசுதாஸ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். சீமா தனது 2 மகன்களுடன் வீட்டின் கதவை அடைத்து விட்டு படுத்துள்ளார்.


 இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருந்ததால் உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை.

 இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் இருந்து தான் புகை வருவது தெரியவந்தது

அந்த அறையும் உள்பக்கம் பூட்டப்பட்டே இருந்தது. அதனையும் உடைத்து உள்ளே சென்றவர்கள் அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைந்தனர்.

 மகன்கள் கெவின், கிஷானுடன் சீமா படுக்கையில் தீயில் கருகிய நிலையில் கிடந்துள்ளார். இந்த சூழலில் திருவட்டார் போலீசாரும் அங்கு வந்தனர். அதே நேரம் இரவில் வெளியே சென்ற யேசுதாசும் தகவல் கிடைத்து அலறியடித்து அங்கு வந்தார். பின்னர் அனைவரும் சேர்ந்து, தீயில் கருகி கிடந்த தாய்-மகன்களை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 ஆனால் வழியிலேயே கிஷான் பரிதாபமாக இறந்தான். கெவின் மற்றும் சீமா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்


இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதில் மகன்களுக்கு நரம்பு பிடிப்பு நோய் இருந்ததால் சீமா மிகுந்த மன வேதனையில் இருந்ததும், கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. நேற்று இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டது அவருக்கு மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சீமா தற்கொலை முடிவை எடுத்துள்ளார். மகன்கள் படுக்கையில் தூங்கிய நிலையில் இன்று அதிகாலை வீட்டில் இருந்த மண் எண்ணையை எடுத்து அவர்கள் மீதும் தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 2 மகன்களை கொன்று தாயும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Post a Comment

புதியது பழையவை