விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலை ஈட்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்து விடுமுறை நாட்களால் படத்தின் வசூல் கூடியதை அடுத்து, 4 நாட்களில் உலக அளவில் ரூ.400 கோடியை ‘லியோ’ ஈட்டியது..
இந்நிலையில், படம் வெளியாகி 6 நாட்கள் கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படும் இப்படம், உலகம் முழுவதும் ரூ.460 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் ரூ.500 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.250-350 கோடி பட்ஜெட்டுக்குள் உருவானதாக கூறப்படும் இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் ஒட்டுமொத்தமாக ரூ.600 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக