குமரியில் கொரோனாவுக்கு 14 பேர் பலி

0

குமரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 14 பேர் பலியாகினர். தொற்று குறைந்து வருவதால் மேலும் ஒரு சிகிச்சை மையம் மூடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து பத்துக்கும் மேலாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 14 பேர் இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று அதிகமாக இருந்த போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் படுக்கைகள் நிரம்பின. இதனால் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, பயோனியர் குமாரசுவாமி கல்லூரி ஆகியவற்றிலும் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டது. 
அதைத்தொடர்ந்து நேற்று ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த சிகிச்சை மையமும் மூடப்பட்டது..

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து இருந்த போது பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அதன் தேவையும் அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாநிலங்களில், பல மாவட்டங்களில் ஆக்சிஜன் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும் குமரி மாவட்டத்திற்கு தேவையான ஆக்சிஜன் கிடைத்துவிடும். 

நாளொன்றுக்கு சராசரியாக 2 டன் ஆக்சிஜன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கிடைத்து வருகிறது. மேலும் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் குறைந்துள்ளது. இதனால் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் சேகரிப்பு மையத்தில் 10 டன் ஆக்சிஜன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)