தோவாளை மார்க்கெட்டில் பூ விற்பனை தொடங்கியது

0


2 வாரத்துக்கு பின் தோவாளை மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் பூக்கள் விற்பனை தொடங்கியது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மிகிழ்ச்சி அடைந்தனர்.

தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழா, பண்டிகை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறைந்து காணப்படும். 

தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து பூக்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்கின்றனர். மேலும், கேரளாவுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்ததால் தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு பூக்கள் முழுவதுமாக அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டது. 
இதனால், விற்பனைக்கு வந்த பூக்களில் பெரும்பாலானவை தேக்கநிலையை அடைந்ததால், வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

மேலும், கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் தோவாளை பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால், வியாபாரம் முற்றிலும் முடங்கியது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள பூக்களை பறிக்காமல் செடிகளில் விட்டு விட்டனர். 
இதனால் பூக்கள் செடிகளிலிருந்து அழுகின. இருப்பினும் உள்ளூர் பொதுமக்களின் தேவைகளுக்காக ஒரு சில இடங்களில் இருந்து வந்த பூக்களை சில வியாபாரிகள் அவரவர் வீடுகளில் வைத்து சமூக இடைவெளியில் விற்பனை செய்து வந்தனர்.

 இந்தநிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதில் நடைபாதைகளில் பூக்கடைகள் திறக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.  இதனையடுத்து நேற்று தோவாளையில் நடைபாதையில் உள்ள கடைகளுடன், பூ மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் ஒரு சில கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.600-க்கு விற்பனை ஆனது.
இதைத் தவிர தோவாளையில் விற்பனையான மற்ற பூக்களின் விலை வருமாறு:-
அரளி ரூ.100, மல்லிகை ரூ.150, முல்லை ரூ.600, சம்பங்கி ரூ.30, கனகாம்பரம் ரூ.200, வாடாமல்லி ரூ.30, துளசி ரூ.20, தாமரை(100 எண்ணம்) ரூ.200, கோழிப்பூ ரூ.40, பச்சை ரூ.6, ரோஸ் பாக்கெட் ரூ.15, பட்டன் ரோஸ் ரூ.100, ஸ்டம்புரோஸ் ரூ.150, மஞ்சள் கிரேந்தி ரூ.40, சிவப்பு கேந்தி ரூ.50, சிவந்தி மஞ்சள் ரூ.100, சிவந்தி வெள்ளை ரூ.100, கொழுந்து ரூ.70, மருக்கொழுந்து ரூ.80 என விற்பனையானது.
இதுகுறித்து தோவாளை பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில்,தற்போது அரசு பூ கடைகளை திறக்க அனுமதித்துள்ளது. 
ஆனாலும் பூ மார்க்கெட் திறக்கப்படவில்லை. 

விவசாயிகளும் பல்வேறு இடங்களிலிருந்து பூக்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். நேற்று மட்டும் 5 டன் பூக்கள் பூ மார்க்கெட்டுக்கு வந்தன. பூக்கள் கேரளாவுக்கு அறுப்ப  முடியாமல் இருந்தாலும் கூட மார்த்தாண்டம், களியக்காவிளை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள வியாபாரிகள் மூலமும், உள்ளூர் சிறுவியாபாரிகள் மூலமும் விற்பனையானது. விவசாயிகளின் நலன் கருதி நாங்கள் சமூக இடைவெளியுடன் சிலர் அவரவர் வீடுகளில் வைத்தும், சிலர் பூ மார்க்கெட்டுக்கு உள்ளே சமூக இடைவெளியுடன் விற்பனை செய்தோம்.
எனவே, அரசு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி பூட்டப்பட்டுள்ள மார்க்கெட்டை உடனடியாக திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)