திருவட்டார் அருகே கழிவறையில் மனித எலும்புக்கூடு கிடந்தது. அவர் யார்? என்று போலீசார்் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஏற்றக்கோடு ஊராட்சி சார்பில் மாத்தார் இரட்டைக் கரை சந்திப்பில் பெண்களுக்கான கழிவறை (மகளிர் சுகாதார வளாகம்) கட்டப்பட்டது. சில வருட பயன் பாட்டுக்கு பின்னர் அந்த கழிவறை மூடப்பட்டு ஊராட்சியின் சார்பில் பூட்டு போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கழிவறை கதவு வழியாக எட்டி பார்த்த போது, உள்ளே மனித எலும்புக்கூடு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுபற்றி ஏற்றக்கோடு கிராம அலுவலர் விஜிலாவுக்கும், திருவட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்த போது, கதவு உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை நெம்பி திறந்து உள்ளே சென்றனர்.அங்கு மனித எலும்புக்கூட்டின் மீது முழுக்கை சட்டை, லுங்கி இருந்தது. உடனே தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டார்.
அவர்் எலும்புக் கூட்டை சேகரித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் ஆண் என்றும் 50 முதல் 55 வயது இருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
கழிவறை உள்புறம் பூட்டப்பட்டு இருந்ததால், இறந்தவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பூட்டிக்கிடந்த கழிவறையில் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.