குமரியில் இரவு நேர ஊரடங்கு அமல்..

0

தொற்று பரவலை கட்டுப்படுத்த, நீண்ட நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் போலீசார் விடிய, விடிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இரவு நேர ஊரடங்கின் போது வணிக வளாகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை இரவு 10 மணியில்  இருந்து அதிகாலை 5 மணி வரை செயல்படாது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டது.இதையடுத்து ஊரடங்கு நடைமுறைகளை முழுமையாக அமல்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன ரோந்து மற்றும் தற்காலிக பேரிகார்டுகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் போலீசார் விடிய, விடிய ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 10 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளை மூடும்படி போலீசார் கடைக்காரர்களுக்கு எச்சரித்தனர். பல்வேறு இடங்களில் இரவு 9 மணி முதலே போலீசார் வாகனங்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் கடைகளை மூடும்படி கூறினர்.நாகர்கோவிலில் கோட்டார், வடிவீஸ்வரம், பார்வதிபுரம், வடசேரி, ஒழுகினசேரி, செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

இரவு 10 மணிக்கு மேல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். ஊரடங்கின் முதல் நாள் என்பதால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும், முககவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் போலீசார் நேற்றிரவு அபராதம் விதித்தனர்.
இதேபோல் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு முககவசம் அணியாமல் இருந்த 5 பயணிகளுக்கு தலா ரூ.200 வீதம் ரெயில்வே போலீசார் அபராதம் விதித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)