பெண் டாக்டர் வீடு உள்பட பல இடங்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். 226 பவுன் நகை மீட்கப்பட்டது.
நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் அருகே மேற்கு லுத்ரன் தெருவை சேர்ந்தவர் அமலகுமார். இவருடைய மனைவி ஜலஜா தேவகுமாரி (வயது 59). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணி புரிந்து வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. மகளுக்கு திருமணமாகி விட்டது. கணவரும், மகனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். அதைத்தொடர்ந்து வீட்டில் ஜலஜா தேவகுமாரி தனியாக வசித்து வந்தார்.சம்பவத்தன்று ஜலஜா தேவகுமாரி இரவு பணிக்கு சென்று விட்டு காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றுபார்த்தபோது பீரோவில் வைத்து இருந்த 83 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வந்தனர். மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையனின் கைரேகைகளும் சேகரிக்கப்பட்டன. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் துப்பு துலக்க நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனா்.
இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையில் தொடர்பு உள்ளவர் கேரள மாநிலம் வயநாடு புதூர்வயல் பகுதியை சேர்ந்த ஜாய் (52) என்றும், அவரை பிடித்து விசாரித்த போது டாக்டர் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஜாயை போலீசார் கைது செய்தனர்.மேலும் டாக்டர் வீட்டில் திருடிய நகைகளையும் ஜாயிடம் இருந்து மீட்டனர்.
இதுபற்றி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்று நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-பெண் டாக்டா் ஜலஜா தேவகுமாரிவீட்டில் 83 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ஜாய் என்பவரை தனிப்படையினர் பார்வதிபுரம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ஜாயின் உருவம் தெளிவாக இருந்தது. அதன் அடிப்படையில் பிடிபட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மேக்காமண்டபம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் டாக்டர் ஜலஜா தேவகுமாரி வீடு தவிர கோட்டார், வடசேரி மற்றும் தக்கலை, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் நடந்த மொத்தம் 12 திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்து உள்ளது. கைது செய்யப்பட்ட ஜாயிடம் இருந்து டாக்டர் ஜலஜா தேவகுமாரி வீட்டில் திருடிய 83 பவுன் நகை உள்பட மொத்தம் 226 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் ஜாய் மீது 2019-ம் ஆண்டு முதல் கேரளாவில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க 10 ஆண்டுகளுக்கு முன்புள்ள கஞ்சா வியாபாரிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இருந்து குறைந்தது 8 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு ஹரிகிரண் பிரசாத் கூறினார். பேட்டியின்போது நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், நேசமணி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் உள்பட பலர் உடன் இருந்தனர்.