ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு



ஆரல்வாய்மொழி அருகே உள்ள தேவசகாயம் மவுண்ட்-மங்கம்மாள் சாலையில் தெற்குமலை ஓடை அருகே இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பொதுபணித்துறையினரால் அகற்றப்பட்டது. அப்போது ஒரு மாற்றுத்திறனாளியின் வீடு மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. அத்துடன் அதிகாரிகளிடம் பொதுமக்கள் மாற்று ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி அந்தப் பகுதியில் உள்ள பிற ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. இதற்காக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் வின்ஸ் ஆன்றோ, வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஹரி நயினார் பிள்ளை, கலா, உதவியாளர்கள் முத்துகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு வந்தனர்.

அப்போது கவுன்சிலர் மணி மற்றும் தேவசகாயம் மவுண்ட் பங்குபேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு நின்று ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, ஏற்கனவே அகற்றப்பட்ட வீடுகளுக்கு இதுவரை மாற்று ஏற்பாடு செய்யவில்லை. எனவே, மேலும் ஆக்கிரமிப்பை அகற்ற விடமாட்டோம் என்று சொல்லி பணியை தடுத்து நிறுத்தினர்.இதுகுறித்து தகவல் அறிந்த தோவாளை தாசில்தார் தாஜ் நிசா, நில அளவையர் சங்கரம்மாள் ஆகியோர் அங்கு வந்தனர். மேலும், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமாரும் அங்கு வந்து பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்பு அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை தொடர்ந்து செய்தனர்.


 

Post a Comment

புதியது பழையவை