திருப்பதிசாரம் அருகே இளம் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


திருப்பதிசாரம் அருகே நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஆலய அரசன், தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 32). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

 இருவரும் தேரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3, 1-ம் வகுப்பு  படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலையில் பள்ளி வேனில் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது தேரேகால்புதூரில் இறங்குவார்கள். அங்கிருந்து குழந்தைகளை லட்சுமி வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் குழந்தைகள் தேரேகால்புதூரில் வந்து இறங்கியதும், லட்சுமி அவர்களை அழைத்துக்கொண்டு சண்முகாநகர் பகுதி தெரு வழியாக திருவள்ளுவர் தெரு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை, ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி ஒருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தார். அந்த நபர் திடீரென லட்சுமி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். உடனே அவர் ‘திருடன்… திருடன்…’ என சத்தமிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த நபர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். 

இதுகுறித்து லட்சுமி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஆட்கள்  நடமாட்டம் அதிகம் உளள தெருவில் இளம்பெண்ணிடம் மர்ம ஆசாமி தங்க சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Post a Comment

புதியது பழையவை