காய்கறிகளில் முக்கியமானது தக்காளி. வீட்டில் தினசரி நடைபெறும் சமையலில் தக்காளிக்கு முக்கிய பங்கு உண்டு. இதனாலேயே அனைத்து வீடுகளிலும் எப்போதும் தக்காளி இருக்கும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தக்காளியின் விலை குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே உயர்ந்து வருகிறது
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் வடசேரி கனகமூலம் சந்தை, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம், தக்கலை, களியக்காவிளை ஆகிய இடங்களில் முக்கிய சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வடசேரி கனகமூலம் சந்தையில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
வரத்து குறைவு
இந்த நிலையில் கனகமூலம் சந்தையில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாகவே உயர்ந்து வருகிறது. அதாவது வழக்கமாக ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படும் தக்காளி கிடு கிடுவென உயர்ந்து நேற்று ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுபற்றி சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, “கனகமூலம் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கோவில் கொடை விழா மற்றும் திருமண விழாக்கள் அதிகளவு இருப்பதால் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் தேவைக்கு ஏற்ப தக்காளி கிடைக்கவில்லை. இதனால் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது” என்றார். தக்காளி விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
காய்கறி விலை விவரம்
வடசேரி கனகமூலம் சந்தையில் மற்ற காய்கறிகளின் நேற்றைய விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
முருங்கைக்காய்-ரூ.16, கத்தரிக்காய்-ரூ.36, கேரட்-ரூ.56, பீன்ஸ்-ரூ.76, தடியங்காய்-ரூ.26, மிளகாய்-ரூ.46, சேனை-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.36, வெள்ளரிக்காய்-ரூ.30, புடலங்காய்-ரூ.46, முட்டைகோஸ்-ரூ.30, பீட்ரூட்-ரூ.30, உருளைக்கிழங்கு-ரூ.40 என்ற விலையில் விற்பனை ஆனது