சின்னமுட்டத்தில் விசைப்படகுகள்-வலைகள் சீரமைக்கும் பணி தொடங்கியது

0


ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும். ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். 

இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல இந்த ஆண்டு கடந்த மாதம் 15-ந் தேதி முதல் தடை அமுலுக்கு வந்து உள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளது. 

இதற்கிடையில் இந்த மீன்பிடி தடை காலம் ஜூன் மாதம் 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடையஉள்ளது. இன்னும் 20 நாட்களே உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 

சின்னமுட்டத்தில் உள்ள படகுகட்டும் தளத்தில் கரையேற்றி படகுகளின் உடைந்த பகுதியை சீரமைப்பது, பச்சை நிற வர்ணம் தீட்டுவது, பழுதான என்ஜின்களை சீரமைப்பது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)