விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க கைவரிசை காட்டியது அம்பலம்..

0

விலை உயர்ந்த புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக கைதான சிறுவன் உள்பட 3 பேர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 கன்னியாகுமரி நாகர்கோவில்: விலை உயர்ந்த புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக கைதான சிறுவன் உள்பட 3 பேர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:- தொடர் செல்போன் பறிப்பு நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. இதுதொடர்பான புகார்கள் கோட்டார், வடசேரி, ஆசாரிபள்ளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் குவிய தொடங்கின. இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புத்தேரி ஏ.கே நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது 63) என்பவர் சம்பவத்தன்று இரவு வடசேரி பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து வீரமணி வடசேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

மடக்கி பிடித்தனர் மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா கட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அதில் 3 பேரின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் வடசேரி சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே, அவர்கள் தப்பியோட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.‌ விசாரணையில் மாதவலாயம் மைதின்புரத்தை சேர்ந்த முகமது உமர் (வயது 19), ஆரல்வாய்மொழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூரிய நரேஷ் குமார் (21) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், வடசேரியில் வைத்து வீரமணியின் செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது.‌ இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்... விசாரணையின் போது அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:- முகமது உமர் உள்பட 3 பேரும் நெருங்கிய நண்பர்கள். 3 பேருக்கும் விலை உயர்ந்த புதிய மோட்டார் சைக்கிள் வாங்க ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்காக 3 பேரும் சேர்ந்து இரவு நேரங்களில் தனியாக செல்லும் நபர்களை குறிவைத்தும், வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் தூங்கும் பயணிகள், மது போதையில் இருப்பவர்களிடமும் செல்போன்களை பறித்துள்ளனர். இப்படி கடந்த ஒரு மாதமாக இதுபோன்ற செல்போன் பறிப்பு சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர். சில செல்போன்களை கடைகளில் விற்று பணம் பெற்றதாக கூறினர். ‌ இதையடுத்து முகமது உமர் உள்பட 3 பேரிடம் இருந்து 10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)