தெப்பக்குளத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம்


கன்னியாகுமரி மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருேக பறக்கையில் உள்ள கோவில் தெப்பக்குளத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் மிதந்தது. இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- 

பெண் பிணம்

 நாகர்கோவில் அருகே உள்ள பறக்கையில் மதுசூதனபெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் நேற்று பிற்பகலில் ஒரு பெண் பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலட்சுமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 

பிணம் குளத்தின் நடுப்பகுதியில் மிதந்து கொண்டிருந்ததால் போலீசாரால் மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 தீயணைப்பு வீரர்கள்

 மீட்டனர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தெப்பக்குளத்தில் இறங்கி பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து பிணத்தை போலீசார் ஆய்வு செய்த போது இறந்தவருக்கு சுமார் 55 வயது இருக்கும் என தெரிகிறது. மேலும், பிணம் மிகவும் அழுகியநிலையில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

 இதனால், இறந்து 5 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. பிணத்தின் தலைமுடி சடைமுடியாக இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 எப்படி இறந்தார்?

 தொடர்ந்து இறந்தவர் தெப்பக்குளத்தில் குளிக்க இறங்கிய போது கால் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Post a Comment

புதியது பழையவை