கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர், திருவள்ளுவர் சிலைகள் அருகே ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறந்து சென்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
உலக சுற்றுலா தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி சுற்றுலா தலம் திகழ்கிறது. இங்கு வார விடுமுறையான இன்று (நவ.26 சனிக்கிழமை) மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது
அப்போது வானில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் அருகே ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறந்துசென்றது.
இதை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் வீடியோ எடுத்தனர். மேலும் இந்த ஹெலிகாப்டர் கோவளம் வரை சென்று திரும்பிவந்துள்ளது.
இது குறித்து காவலர்கள் தரப்பில், 'ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது தொடர்பாக எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். விசாரணையின் முடிவில் தகவல் தெரிவிப்போம்' என்றனர்.
எனினும் இது தொடர்பாக அவர்கள் விரிவான பதில் அளிக்கவில்லை. இந்த ஹெலிகாப்டரானது சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமுள்ள மாலை 3 மணியளவில் பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.