கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடக்கம்

0

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு சாலை கடற்கரை சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.


சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. ஈசிஆர் சாலை சென்னை மாநகரை மாமல்லபுரம், புதுச்சேரி, சீர்காழி, நாகபட்டினம், திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி வழியே கன்னியாகுமரி வரை செல்கிறது. இருபுறமும் 11 மீ. அகலத்தில் 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து நேற்று (டிச.3) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'கடந்த ஜனவரி 14, 1998 அன்று மேம்படுத்தப்பட்ட இச்சாலையினை மக்கள் பயன்பாட்டிற்கு அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி கொண்டுவந்தார். இச்சாலையை பாண்டிச்சேரி முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலையாக 1999-ல் தரம் உயர்த்தியவர் கருணாநிதி தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.


கிழக்கு கடற்கரைச் சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ நீளம் ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்த நில எடுப்பு பணிக்காக தமிழக அரசால் கடந்த நவம்பர் 14, 2005 அன்று நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்பொழுது ரூ.930.00 கோடிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் பெறப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இச்சாலை பணியின் அவசியத்தின் கருதி விரைவாக முடிக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், இப்பணிக்கான உத்தேச பணி முடிவுறும் நாள் செப்.30, 2023 எனவும் தெரிவித்துள்ளது. மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையை கி.மீ. 13/615 - 14/550 வரை இரண்டாம் கட்டமாக கொட்டிவாக்கம் கிராமத்தில் ஆறுவழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு அரசு 15.12.2021 அன்று ரூ.17.16 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியது என கூறப்பட்டுள்ளது..

Post a Comment

0Comments
Post a Comment (0)