சுசீந்திரத்தில் இன்று தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழா கொடியேற்றம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு..

0


குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா இன்று (28-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இந்த திருவிழா வருகிற 6-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நேற்று மாலை 4.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப் பட்டத்தை மேளம், தாளம், வெடிமுழக்கத்துடன், முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வந்தனர். சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட்டத்திற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது

இன்று (28-ந் தேதி) காலை 9.15 மணிக்கு தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடி மரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைத்தார். வட்டப் பள்ளிமடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்தார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்டு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


9-ம் திருவிழாவான வருகிற 5-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடக்கிறது.

 திருவிழாவின் இறுதி நாளான 6-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் :

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அவசரகால ஒத்திகை
Post a Comment

0Comments
Post a Comment (0)