ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரவுத்திரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், கோகுல். தொடர்ந்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, விஜய் சேதுபதி நடித்த ‘ஜுங்கா’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். இப்போது ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் அடுத்து இயக்க இருக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்புவுக்குப் பதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்டபோது, “‘கொரோனா குமார்’ படம் பற்றி நிறைய தகவல்கள் வருகின்றன. அந்தப் படத்தில் சிம்பு நடிக்கவில்லை என்றும் படம் டிராப் என்றும் சொல்கிறார்கள்
அது டிராப்பா, இல்லையா என்பதை நான்தான் சொல்ல வேண்டும். அந்தப் படம் டிராப் இல்லை. அதை யாராலும் நிறுத்த முடியாது. கண்டிப்பாக அந்தப் படம் பற்றிய அறிவிப்பு வரும். அதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவில்லை. யார் நடிக்கிறார்கள் என்பதையும் நானே விரைவில் அறிவிக்கிறேன். அதுவரை பொய் தகவல்களை நம்ப வேண்டாம்” என்றார்