சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

0

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது.

விழாவின் 8-வது நாளில் அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 மற்றும் 10-ம் திருவிழாக்களில் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. விழாவின் 11-ம் நாளான இன்று மதியம் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து யுகப்படிப்பும் நடந்தது. பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.


தேரோட்ட நிகழ்ச்சிக்கு தலைமை பதி குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ்,பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முத்து குடைகளும், மேள தாளங்களும் முன்செல்ல தேரோட்டம் தொடங்கியது.

தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட தேர் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமை பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. வடக்கு வாசல் பகுதியில் அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவை அடங்கிய பொருட்களை சுருளாக படைத்து வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கு பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குதலும் நடைபெற்றது. பின்னர் இன்று மாலை 6 மணியளவில் தேர் நிலைக்கு வந்தடைகிறது. தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி ரிஷப வாகனத்தில் தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை (செவ்வாய்க்கிழ மை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். 


Post a Comment

0Comments
Post a Comment (0)