திருட்டு வழக்கில் கைதான கள்ளக்காதல் ஜோடி சிறையில் அடைப்பு.

0


  கன்னியாகுமரி குளச்சல், குளச்சலில் திருட்டு வழக்கில் கைதான கள்ளக்காதல் ஜோடி சிறையில் அடைக்கப்பட்டனர். 

நகை, பணம் கொள்ளை

 குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி நள்ளிரவு மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போனது. இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்றுமுன்தினம் நகை, பணத்தை கொள்ளையடித்த கருங்கல் அருகே உள்ள கப்பியறையை சேர்ந்த சாபுமோன் (வயது37), அவரது கள்ளக்காதலி அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த நூர்ஜகான் (43) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சாபுமோன் குளச்சல் பகுதியில் 4 இடங்கள், இரணியல் போலீஸ் சரகத்தில் 7 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் ஆலயம், வீடுகளில் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 45 பவுன் நகைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்

கைது செய்யப்பட்ட சாபுமோன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நான் எம்.பி.ஏ. பட்டதாரி ஆகும். வள்ளியூரில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறேன். இந்த பண்ணையில் நூர்ஜகான் வேலை பார்த்து வருகிறார். இதில் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. நாங்கள் ஆலயங்களில் கொள்ளையடிப்பதற்கு முன்பு பகலில் இருவரும் கணவன்-மனைவி போல் ஜோடியாக சென்று வழிபாட்டில் கலந்து கொண்டு நோட்டமிடுவோம். குளச்சல் புனித காணிக்கை மாதா ஆலயத்தில் நடந்த கொள்ளையில் மட்டும் நூர்ஜகான் என்னுடன் வந்தார். பிற ஆலயங்களில் நான் மட்டும் தனியாக சென்று கொள்ளையில் ஈடுபட்டேன். 

வெளிநாட்டு வேலை 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏஜெண்டு மூலம் வெளிநாடு சென்றேன். அங்கு ஓட்டலில் சர்வராக வேலை செய்ய கூறியதால் வேலையை விட்டு விட்டு ஊர் திரும்பினேன். பின்னர் திருட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தேன்.


 இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி இருவரையும் போலீசார் தக்கலை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் சாபுமோன் நாகர்கோவில் மாவட்ட சிறையிலும், நூர்ஜகான் தக்கலை பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)