திருமண ஆசைகாட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்: மருத்துவமனை ஆதார் கார்டு சோதனையில் சிக்கினார்


கன்னியாகுமரியில் மகப்பேறு சலுகைக்காக மருத்துவமனையில் ஆதார் கார்டை சோதனை செய்த போது சிறுமி 5 மாத கர்ப்பமானது அம்பலமானது. இதுதொடர்பாக வாலிபர் மீது போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கரிமரம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த்(23). கூலித் தொழிலாளியான இவர், பக்கத்து கிராமத்தில் வேலைக்குச் சென்றபோது அங்கிருந்த 18 வயது நிரம்பாத சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது காதலாக மாறியது. சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி வாலிபர், கர்ப்பமாக்கினார். இதனிடையே சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்படவே குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அப்போது சிறுமியின் ஆதார் அட்டையை வாங்கி, அரசு மருத்துவமனைப் பணியாளர்கள் பெயரைப் பதிவு செய்தனர். அரசிடம் இருந்து கிடைக்கும் மகப்பேறு சலுகைகளுக்காக இந்தப் பதிவினை செய்தனர். அப்போது சிறுமிக்கு 18 வயது ஆகாதது தெரியவந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனையில் இருந்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணை நடத்தியதில் சிறுமியை ஏமாற்றி வாலிபர் நிஷாந்த் கர்ப்பமாக்கியது தெரியவந்தது. 


சிறுமி தன் வீட்டிலும் இதை மறைத்து 5 மாத கர்ப்பத்திற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூலித் தொழிலாளி நிஷாந்த் மீது போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


Post a Comment

புதியது பழையவை