குமரியை சேர்ந்தவர்களை புறக்கணித்து விட்டு வடமாநிலத்தவருக்கு நிரந்தர பணியா?

0

மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலையில் குமரி மாவட்டத்தினரை புறக்கணித்துவிட்டு, வடமாநிலத்தவருக்கு நிரந்தரப் பணி வழங்குவதா? என குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் கேள்வி எழுப்பினர். 

குறைதீர்க்கும் கூட்டம்

 குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

 கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி, மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். 
கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் பேசும்போது கூறியதாவது:- குமரி மாவட்ட கடற்கரை கிராமப் பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

குறிப்பாக அரையன் தோப்பு சாலை மோசமாக காணப்படுகிறது. அங்கு சிமெண்டு சாலை அல்லது தார் சாலையை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்...

தரம் உயர்த்த வேண்டும்

 இதுபோல் மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் சாலை பழுதாகி காணப்படுவதால் தேங்காப்பட்டணம் துறைமுகத்திற்கு செல்லும் மீனவர்கள் பல கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த சாலைகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தூத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள கடைகளை மாற்ற வேண்டும்.

 அந்த பகுதியில் காணாமல் போன நீச்சல் குளத்தை கண்டுபிடித்து தர வேண்டும். மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலையில் 24 பேர் நிரந்தரப் பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்கூட குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை. தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேரும், வடமாநிலங்களைச் சேர்ந்த 20 பேரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

 புற்றுநோய் பாதிப்பு 

இந்த மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு தேவையான ஆயிரக்கணக்கான டன் மணல் குமரி மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த மணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுக்கும்போது ஏற்படும் கதிர்வீச்சுக்களால் கடற்கரைப் பகுதி மக்கள் கொத்து, கொத்தாக உயிர்களை இழந்து வருகிறார்கள்.

 குடியிருப்புகள் அழிந்து வருகின்றன. கடற்கரை கிராமங்கள் பாதிக்கு மேல் அழிந்துவிட்டன. புற்றுநோய் பாதிப்பு மற்ற பகுதிகளைவிட கடற்கரை கிராமங்களில் 4 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகமாக உள்ளது.


ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்காமல் புறக்கணித்துவிட்டு, வடமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்த மணல் ஆலை இனிமேல் வடமாநிலங்களில் இருந்து மண் எடுக்கட்டும். 
குமரி மாவட்டத்தில் இனிமேல் மண் எடுக்கக்கூடாது.

 500 கிராமுக்கு குறைவான அளவிலான வாளை மீன்களை மக்கள் சாப்பிட பயன்படுத்துவதில்லை. எனவே சிறிய அளவுள்ள வாளைமீன்களை பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். (இதற்கு ஒரு தரப்பினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது).

 விரைவில் பணி 

இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் உள்ள சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அரையன்தோப்பு பகுதியில் சாலைகள் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சவர் கட்டிய பிறகு பணியை மேற்கொள்ள முடியும் என்பதால் தற்போது சாலை சீரமைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடல் அரிப்பு தடுப்புச்சுவர் கட்டுவதற்கு ரூ.6 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு தடுப்புச் சுவர் கட்ட அனுமதி கிடைத்ததும் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் புத்தன் துறை, இரயுமன் துறை, நீரோடி பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் சாலை சீரமைப்பிற்கும் ரூ.40 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 விரைவில் அந்த பணிகள் தொடங்கப்படும். கன்னியாகுமரி பகுதியில் உள்ள நீச்சல்குளம் 1982-ம் ஆண்டு சில சூழ்நிலைகளின் காரணமாக கைவிடப்பட்டது.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை பணியிடங்களுக்கு வடமாநிலத்தவரை பணி அமர்த்தியது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

 வாய்த்தகராறு 

கூட்டத்தில் துணை இயக்குனர் (மீன்வளத்துறை) காசிநாத பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற் பொறியாளர் பாஸ்கரன், மீனவர் சங்க பிரதிநிதிகள் குறும்பனை பெர்லின், அலெக்சாண்டர், விமல்ராஜ், எனல்ராஜ், சேசடிமை, பிராங்கிளின், யோர்தான், அருட்பணியாளர் டன்ஸ்டன், ஜஸ்டின் ஆன்றனி, கேசவன்புத்தன்துறை பஞ்சாயத்து தலைவி கெபின்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

கூட்டம் முடிந்த பிறகு சிறிய அளவிலான வாளை மீனை பிடிப்பது தொடர்பான பிரச்சினையில் நாஞ்சில் கூட்ட அரங்குக்கு முன்பாக சில மீனவர்கள் 2 தரப்பாக வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லச் செய்தனர்.

 இதனால் அங்கு உருவான திடீர் பரபரப்பு அடங்கியது


Post a Comment

0Comments
Post a Comment (0)