இப்படத்தில் ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்கே சுரேஷ், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
கதை சுருக்கம்
குமரி மாவட்டத்தில் 2005ஆம் ஆண்டு நடக்கும் கதையாக தக்ஸ் படம் அமைந்துள்ளது. ஹிருது ஹாரூன் ஒரு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு அங்குள்ள சிறைவாசிகளுடன் சேர்ந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் திட்டமிட்டபடி தப்பித்தார்களா அல்லது மாட்டிக் கொண்டார்களா என்பதே தக்ஸ் படத்தின் கதை
ஏ சினாமிகா என்ற ஒரு காதல் படத்தை இயக்கிய பிருந்தா மாஸ்டரா தக்ஸ் படத்தை இயக்கியுள்ளார் என்று ஆச்சர்யப்படும் விதமாக இந்த படத்தை இயக்கி உள்ளார். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஒரு ஆக்சன் த்ரில்லர் கதையாக இருந்தது. முற்றிலும் வித்தியாசமான திரைகதை கொண்ட இந்த கதையை சிறப்பாக இயக்கியுள்ளார் பிருந்தா மாஸ்டர்.
பரபரப்பான திரைக்கதை
முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த கதையை பரபரப்பான திரைக்கதையுடன் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. ஹிருது ஹாரூன் ஒரு இளம் வயது வாலிபனாக கண்களில் கோபத்துடன், ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக ஆட்டோவில் ஒருவரை துரத்தி அடிக்கும் காட்சியில் கைதட்டல்களை பெறுகிறார். போலீஸ் அதிகாரியாக ஆர்கே சுரேஷ் வழக்கம் போல அசத்தியுள்ளார். ஒரு சிறை அதிகாரியாகவே வாழ்ந்துள்ளார் என்றே கூறலாம். மறுபுறம் பாபி சிம்ஹா, முனீஸ் காந்த் ஆகியோரின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது.
சிறப்பு
இவர்களை தாண்டி இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தான். ஆக்சன் படங்கள் என்றாலே சாம் சிஎஸ் தான் என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாகவே இசையமைத்துள்ளார். இவரது பின்னணி இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் இந்த கதையில் தேவையில்லாத காட்சிகளும், பெரிதாக போர் அடிக்காமலும் இருப்பது மேலும் இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது. படம் ஆரம்பம் முதல் முடியும் வரை ரசிகர்களை பரபரப்பாகவே வைத்துள்ளனர். தக்ஸ் - சிறப்பு..
THUGS RATING : 3/5