சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ்
Author -
Kumari Sangamam
March 03, 2023
ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா வெளியிட்டார்.
‘லாக்கப்’ எனும் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரபலமான வணிக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இயக்குநர் மோகன் ராஜா பேசுகையில், ” என்னுடைய உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குநர் சார்லஸ் பிரபு கடும் உழைப்பாளி. ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றியில் அவரின் பங்களிப்பு அதிகம். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இயக்குநராக உயர்ந்திருப்பது எனக்கு பெருமை. அவர் லாக் டவுன் காலகட்டத்தில் ‘லாக்கப்’ எனும் படத்தை இயக்கினார். ‘லாக்கப்’ ஒரு உணர்வுபூர்வமான படைப்பு. இந்த திரைப்படம் ‘தளபதி’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் வசனத்தை போல், இந்த திரைப்படம் ‘லாக்கப்’பைவிட நன்றாக வந்திருக்கிறது என சார்லஸ் என்னிடம் தெரிவித்திருக்கிறார். ‘லாக்கப்’ திரைப்படத்தை விட, இந்த ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தை கமர்சியலாக இயக்கியிருப்பதாக தெரிவித்தார். இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகளையும், முன்னோட்டத்தையும் பார்த்தேன். இது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. சார்லஸின் கதையை ஒப்புக்கொண்டு நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘சொப்பன சுந்தரி’ என்றதும் அனைவருக்கும் ‘கரகாட்டக்காரன்’ பட காமெடி காட்சிகள் நினைவுக்கு வரும். இந்த ‘சொப்பன சுந்தரி’யை பட வெளியிட்டிற்குப் பிறகு ரசிகர்களின் மனதில் வைத்துக் கொள்வார்கள்.