மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நாளை தொடங்குகிறது

0


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. தொடக்க விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழக அமைச்சர்கள் 3 பேர் கலந்து கொள்கிறார்கள்.

 குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாசிப் பெருந்திருவிழா நாளை ( ஞாயிற்றுக்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் போன்றவை நடக்கிறது.


இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், விஜயதரணி, தளவாய் சுந்தரம், ராஜேஷ்குமார், எம்.ஆர். காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி, துணைத்தலைவர் சுஜி, அரசு செயலாளர்கள் சந்திரமோகன், குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாந்த், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், கூடுதல் இணை ஆணையர்கள் திருமகள், ஹரிப்பிரியா, கவிதா, இணை ஆணையர்கள் சுதர்சன், ஜெயராம், ஞானசேகர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

 

பகல் 12 மணிக்கு கருமன்கூடல் தொழில் அதிபர் கல்யாண சுந்தரம் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை போன்றவை நடக்கிறது. 2-வது நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவில் பக்தர்களால் அம்மனுக்கு பூஜை பொருட்கள் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜையும், 3-வது நாள் முதல் 9-வது நாள் வரை காலை 9.30 மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும் நடைபெறும்.

 
 3-வது நாள் மாலை 6.15 மணிக்கு கீழ்கரை சடையப்பர் கோவிலில் இருந்து யானைமீது சந்தனகுடம் பவனி, 4-வது நாள் பகல் 11.30 மணிக்கு மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோவிலில் இருந்தும், 12 மணிக்கு வெட்டுமடை இசக்கி அம்மன் கோவிலில் இருந்தும் யானை மீது சந்தனக்குட பவனி, 5-வது நாள் மாலை 6 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் யானை மீது களபம் பவனி போன்றவை நடக்கிறது.

 6-வது நாள் பகல் 12 மணி மற்றும் 12.30 மணிக்கு பருத்திவிளை மற்றும் உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்து சந்தனகுடம் பவனி, இரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வலிய படுக்கை என்ற மகா பூஜை, 7-வது நாள் பாலப்பள்ளம் ஊர்மக்கள் சார்பிலும், மணவாளக்குறிச்சியில் இருந்து மாவட்ட பத்திரப் பதிவுத்துறை சார்பிலும் சந்தனகுடம் பவனி, 8-வது நாள் பகல் 12.30 மணிக்கு நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் இருந்து மாவிளக்கு பவனி, மாலை 6.15 மணிக்கு செம்பொன்விளை சிராயன்விளை

 பக்தர்களால் களப பவனி, 9-வது நாள் காலை 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் சந்தனகுட பவனி, பகல் 12 மணிக்கு சந்தன காப்பு காவடி, இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடைபெறும். திருவிழாவின் 10-வது நாளான 14-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல், 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, காலை 6 மணிக்கு குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் கோவிலுக்கு கொண்டு வருதல், 12.30 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)