சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமியின் அவதார தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வாகன பேரணி தொடங்கியது. இந்த பேரணி நேற்று இரவில் நாகர்கோவில் நாக ராஜா கோவில் திடலை வந்தடைந்தது.
இன்று அதிகாலை நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின ஊர்வலம் தொடங்கியது. இதில் பால ஜனாதிபதி, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக பக்தர்கள் நேற்று இரவே நாகராஜா கோவில் திடலில் குவிந்திருந்தனர்.
அவர்கள் இன்று காலை அய்யா சிவ...சிவ.. அரகர...அரகரா... என்ற பக்தி கோஷத்துடன் சாமிதோப்பை நோக்கி ஊர்வலமாக சென்றனர். காவி உடை அணிந்த அவர்கள் கைகளில் காவி கொடிகளை ஏந்தியபடி சென்றனர். சில பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் எடுத்துச் சென்றனர்.