நாகர்கோவிலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 72 பவுன் நகை கொள்ளை

0நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு முதல் புது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 70).

இவர் நாகர்கோவிலில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வீட்டில் இருந்த நகைகளை சித்திரை விஷூ பண்டிகை அன்று சாமி முன் வைத்து வழிபடுவதற்காக பீரோவைத் திறந்து பார்த்தனர்.

அப்போது பீரோவில் இருந்த 72 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் குடும்பத்தினர் நகையை வீடு முழுவதும் தேடினார்கள்.ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனந்தனிடம் விவரம் கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார பெண்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரிடமும் துருவித்துருவி விசாரணை நடத்தியபோது ஆனந்தன் வீட்டில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் இரண்டு பெண்களையும் பிடித்து நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணையில் அவர்கள் ஆனந்தன் வீட்டில் இருந்து நகைகளை கடந்த சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சென்றது தெரியவந்தது. நகைகளை இருவரும் பங்கு வைத்து சரிபாதியாக எடுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். ஓட்டல் உரிமையாளர் வீட்டில் வேலை செய்த பெண்களே கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆசாரிப்பள்ளம் பகுதியில் பேராசிரியர் ஒருவர் வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருவர் அந்த வீட்டில் இருந்த நகை பணத்தை திருடி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)