தொடர் விடுமுறை முடிந்ததால் குமரியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 73 சிறப்பு பஸ்கள் இயக்கம்

0

தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக குமரியில் இருந்து 73 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

குமரி மாவட்ட மக்கள் கல்வி மற்றும் வேலை காரணமாக சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் வசித்து வருகிறார்கள். அவ்வாறு வசிப்பவர்கள் பண்டிகை விடுமுறை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களுக்கு சொந்த ஊரான குமரி மாவட்டத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு, ஈஸ்டர் பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் வெளியூர்களில் வசிக்கும் குமரி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இந்த விடுமுறை நேற்று முடிவடைந்து மீண்டும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டனர்.

இதன் காரணமாக பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மதுரை, கோவை உள்ளிட்ட பஸ்களில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.மேலும் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 73 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் மார்த்தாண்டம் பணிமனைகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த சிறப்பு பஸ்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

இது ஒருபுறம் இருக்க ரெயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் போட்டி போட்டு ஏறினர். இதே போல சென்னை சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)